ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான பாடத்திட்டம் மற்றும் மாதிரி வினாக்கள் இங்கு இடம்பெற்றிருக்கின்றன...

Sunday 26 August 2012

ஆசிரியர் தகுதித் தேர்வு மீண்டும் நடத்தப்படுகிறது-தேர்வு நேரம் 3 மணி நேரமாகிறது.

ஆசிரியர் தகுதி தேர்வுக்கான ரிசல்ட் நேற்று வெளியிடப்பட்டது. 6 லட்சத்து 76 ஆயிரத்து 763 பேர் எழுதிய தேர்வில் 2,448 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி பெறாத 6.74 லட்சம் பேருக்கு அக்டோபர் 3ம் தேதி மீண்டும்  தேர்வு நடத்தப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்களாக நியமிக்கப்படுவோர் தகுதி தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும் என்று, 2009ம் ஆண்டு மத்திய அரசு சட்டம் இயற்றியது. இதன் அடிப்படையில், தமிழகத்தில் கடந்த ஜூலை 12ம் தேதி ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்பட்டது.  மாநிலம் முழுவதும் 1,027 தேர்வு மையங்களில் 6 லட்சத்து 76 ஆயிரத்து 763 பேர் தேர்வு எழுதினர். தேர்வில் பங்கேற்றவர்கள் 150 மதிப்பெண்களில் 60 சதவீதம் அதாவது 90 மதிப்பெண் எடுத்தால் மட்டுமே ‘பாஸ்’ என கூறப்பட்டிருந்தது


.தேர்வில் ஏற்பட்ட குளறுபடிகளை எதிர்த்து இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஆகஸ்ட் 10ம் தேதி ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் சுர்ஜித் கே.சவுத்ரியை நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி உத்தரவிட்டது.  ஆனால், ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் கோர்ட்டில் ஆஜராகவில்லை. இதற்கு கோர்ட் கடும் கண்டனம் தெரிவித்தது. இதனால், தேர்வு முடிவு வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டது. இதற்கிடையே, திருவண்ணாமலை மாவட்டம் மேல்மலையூரை சேர்ந்த அருள்ராஜ் என்பவர் உயர் நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், ஆசிரியர் தகுதி தேர்வு முடிவுகளை தற்போது வெளியிட தடை விதிக்க வேண்டும் என கோரியிருந்தார். இந்த வழக்கை ஐகோர்ட் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது. இதையறிந்த ஆசிரியர் தேர்வு வாரியம், அவசர அவசரமாக நேற்று அதிகாலை 2 மணியளவில் தகுதி தேர்வு முடிவுகளை இணையதளத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது.  


மொத்தம் தேர்வு எழுதிய 6 லட்சத்து 76 ஆயிரத்து 763 பேரில் வெறும் 2,448 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். 6 லட்சத்து 74 ஆயிரத்து 315 பேர் ‘பெயில்‘ ஆகி உள்ளனர். இது தேர்வு எழுதிய ஆசிரியர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.இந்நிலையில், தேர்ச்சி பெறாத 6 லட்சத்து 74 ஆயிரத்து 315 ஆசிரியர்களுக்கும் அக்டோபர் 3ம் தேதி கட்டணம் எதுவும் இல்லாமல் மீண்டும் தேர்வு எழுத ஒரு வாய்ப்பு அளிக்கப்பட உள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர் சுர்ஜித் கே.சவுத்ரி அறிவித்தார். ஆசிரியர் தகுதி தேர்வின்அடிப்படையில் 18,000 பட்டதாரி ஆசிரியர்களும், 5 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்களும் தேர்ந்தெடுக்கப்பட முடிவு செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.2,448 பேருக்கு உடனே வேலை: ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் சுர்ஜித் கே.சவுத்ரி, சென்னையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:தேர்வில் 60 சதவீதம் அதாவது 90 மதிப்பெண் மற்றும் அதற்கு மேல் பெற்றவர்கள் வெற்றி பெற்றவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.விடைத்தாளில் வினாத்தாளின் வரிசை எண்ணை குறிப்பிடாதவர்களுக்கு 5 மார்க், விடைத்தாளில் பாடப்பிரிவை குறிப்பிடாதவர்களுக்கு 3 மார்க், விருப்ப மொழியை எழுதாதவர்களுக்கு 2 மார்க் குறைக்கப்பட்டுள்ளது. தேர்வு எழுதி விட்டு ஒரிஜினல் விடைத்தாளை (ஓஎம்ஆர் சீட்) கொடுக்காதவர்களின் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. 


விடைத்தாளில் தேர்வு எண்ணை எழுதாமல் போலி எண் எழுதியவர்கள் பேப்பரும் திருத்தப்படவில்லை. பட்டதாரி ஆசிரியர் தேர்வில் 2 பேரின் விடைத்தாளில் உள்ள கையெழுத்தும், விண்ணப்பத்தில் உள்ள கையெழுத்தும் மாறி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவர்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் தேர்வுகளில் 5 ஆண்டு பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.இடைநிலை ஆசிரியருக்காக நடத்தப்பட்ட தகுதி தேர்வை (தாள்,1) மொத்தம் 2 லட்சத்து 88 ஆயிரத்து 588 பேர் எழுதினர். இதில், 1,735 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 0.61 சதவீத தேர்ச்சி ஆகும். பட்டதாரி ஆசிரியர்களுக்காக நடத்தப்பட்ட தேர்வை (தாள்,2) மொத்தம் 3 லட்சத்து 88 ஆயிரத்து 175 பேர் எழுதினர். இதில் 713 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 0.19 தேர்ச்சி ஆகும். இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் என இரண்டு தேர்வையும் (தாள்,1, தாள்,2) எழுதிய 83 பேர் தேர்வாகி உள்ளனர்.


 இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் இரண்டையும் சேர்த்து மொத்தம் 2,448 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் 1,680 பேர் பெண்கள், 768 பேர் ஆண்கள். ஆசிரியர் தகுதி தேர்வு எழுதிய 6 லட்சத்து 76 ஆயிரத்து 763 பேரில் 6 லட்சத்து 74 ஆயிரத்து 315 பேர் ‘பெயில்‘ ஆகியுள்ளனர். 17 உடல் ஊனமுற்றோர்களும், 2 கண் பார்வை இல்லாதவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.தேர்ச்சி பெற்றவர்களுக்கு உடனடியாக ஆசிரியர் வேலை வழங்கப்படும். தேர்ச்சி பெறாத 6 லட்சத்து 74 ஆயிரத்து 315 பேருக்கும் அக்டோபர் 3ம் தேதி தேர்வு எழுத மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்படும். இந்த தேர்வுக்கு அவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க தேவையில்லை. கட்டணம் எதுவும் செலுத்த வேண்டாம். இவர்களுக்கு விரைவில் ஹால் டிக்கெட் அனுப்பி வைக்கப்படும். அக்டோபர் மாதம் இறுதிக்குள் முடிவுகள் வெளியிடப்படும். மறுதேர்வுக்கு கூடுதலாக ஒன்றரை மணி நேரம் வழங்கப்படும். இவ்வாறு சுர்ஜித் கே.சவுத்ரி கூறினார்.



35 சதவீதம் பெற்றால் பாஸ் ஆசிரியர்கள் கேட்கின்றனர்


ஆசிரியர் தகுதி தேர்வில் அதிகம் பேர் 60 மதிப்பெண்களை கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. ‘பள்ளி மாணவர்களுக்கு உள்ளது போன்று எங்களுக்கும் 35 சதவீதம் எடுத்தால் ‘பாஸ்‘ என்று அறிவிக்க வேண்டும்’ என்று ஆசிரியர்கள் கருத்து தெரிவித்தனர்.


முதல் 3 இடங்களை பெண்களே பிடித்தனர்


இடைநிலை ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வில் பொள்ளாச்சியை சேர்ந்த திவ்யா 150க்கு 122 மதிப்பெண் பெற்று முதல் இடத்தையும், திண்டுக்கல் சவீதா, திருச்சி ஷோபனா ஆகியோர் தலா 116 மதிப்பெண் பெற்று அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளனர்.பட்டதாரி ஆசிரியர் தகுதி தேர்வில் சமூக அறிவியல் பாடத்தில் உத்தமபாளையத்தை சேர்ந்த அருள்வாணி 125 மதிப்பெண் பெற்று முதல் இடத்தையும், ஏ.பிருந்தா, சித்ரா இருவரும் 124 மதிப்பெண் பெற்று 2வது, 3வது இடத்தை பெற்றுள்ளனர். பட்டதாரி ஆசிரியர் தகுதி தேர்வில்கணிதம் மற்றும் அறிவியல் பாடப்பிரிவில் நாகப்பட்டினத்தை சேர்ந்த சித்ரா 150க்கு 142 மதிப்பெண் பெற்று முதலிடத்தையும், கோபிசெட்டிபாளையத்தை சேர்ந்த ஷர்மிளா 131 மதிப்பெண் பெற்று 2வது இடத்தையும், உத்தமபாளையத்தை சேர்ந்த ஆர்.பிருந்தாதேவி 117 மதிப்பெண் பெற்று 3ம் இடத்தையும் பிடித்துள்ளனர். இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் தகுதி தேர்வில் முதல் 3 இடங்களையும் 9 பெண்களே பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


அக்டோபர் 3ம் தேதி பள்ளிக்கு விடுமுறை


ஆசிரியர் தகுதி தேர்வில் பெயிலான 6 லட்சத்து 74 ஆயிரத்து 315 பேருக்கும் அக்டோபர் 3ம் தேதி மறு தேர்வு நடத்தப்படும் என்று தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இதையடுத்து தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு அக்டோபர் 3ம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 2ம் தேதி (செவ்வாய்) காந்தி ஜெயந்தி அன்றும் அரசு விடுமுறை என்பது குறிப்பிடத்தக்கது.

2 comments:

jayanthijinu said...

ida othukeedu ilatha intha mudivu yetrukolla mudiayavillai

P.MUTHUKUMARAN said...

கடவுள் என்று தனியாக பிறப்பதில்லை....மக்களின் துயரங்களை ......மனித நேயத்தோடு தீர்ப்பவர்தான் கடவுள்.......அந்தவகையில் கடவுள் என்பவர் கருணாநீதி....மட்டும்தான்....

Post a Comment